LATEST NEWS
“காவல்துறையை இயக்கியது டி.ஜி.பி அல்ல.. தி.மு.க குடும்பம்தான்” எஸ்.பி-க்கள் டிரான்ஸ்பர் விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு..!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், காவல் துறையின் நிர்வாகப் பணிகளில் அரசியல் தலைவர்களின் எந்தவிதமான தலையீடுகளும், அழுத்தங்களும் இருக்காது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய த.வெ.க. அரசு சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதிலும் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான போக்சோ மற்றும் பாலியல் வழக்கு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய தி.மு.க. அரசு இந்த வழக்கை மூடிமறைக்க முயன்றதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு ஏன் உடனடியாக விசாரிக்கப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் ஒருபோதும் முறையான பதிலை அளிக்க மாட்டார்கள் என்றும் அவர் சாடினார்.
மேலும், முந்தைய தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு ஒரு சட்டமும், தி.மு.க. குடும்பத்தினருக்குத் தனிச் சட்டமும் இருந்ததாக அவர் கடுமையாக விமர்சித்தார். “அப்போது காவல்துறையை இயக்கியது டி.ஜி.பி. அல்ல, தி.மு.க. குடும்பம்தான். உதயநிதியின் நண்பர்கள்தான் மாவட்ட எஸ்.பி-க்களை இடமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள்” என்று குற்றம்சாட்டிய அவர், அப்படிப்பட்ட தி.மு.க. இன்று த.வெ.க. அரசின் காவல்துறையைப் பார்த்துக் கேள்வி கேட்பது வேடிக்கையாக உள்ளது என்று சாடினார்.
