LATEST NEWS
தலைமைச் செயலகத்தில் 2 “சூப்பர் முதலமைச்சர்கள்” அவங்க ரெண்டு பேருமா.? அரசாணை இல்லாமலேயே அதிகாரம் செலுத்தும் நண்பர்கள்… முதல்வர் விஜய்க்கு திமுக சரமாரி கேள்வி..!!
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் எந்தப் பதவியில் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பது குறித்து முதலமைச்சர் விஜய்க்கு திமுக சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனப் பிரதான எதிர்க்கட்சியான திமுக குற்றம்சாட்டியுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கொண்டு அமைச்சர்களுக்கும் அரசு உயரதிகாரிகளுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு என்ன அதிகாரப்பூர்வப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என திமுக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வினவியுள்ளது.
அரசுப் பதவிகளில் இல்லாத இவர்கள் இருவரும் தலைமைச் செயலகத்தின் ‘சூப்பர் முதலமைச்சர்களாக’ செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள திமுக, இவர்களின் நியமனம் தொடர்பாக ஏதேனும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதுநாள் வரை அத்தகைய அரசாணை எதையும் வெளியிடாமல் ரகசியம் காப்பதன் பின்னணி என்ன என்றும், இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் எதிர்க்கட்சி சாடியுள்ளது.
இவர்களில் ஜான் ஆரோக்கியசாமி த.வெ.க-வின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து, தற்போது முதல்வரின் அரசியல் ஆலோசகராகச் செயல்படுவதாகவும், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி அரசு நிகழ்வுகள் மற்றும் பொது விவகாரங்களை ஒருங்கிணைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வப் பதவிப் பிரமாணம் இன்றி தனிநபர்கள் அமைச்சரவை மற்றும் முக்கிய ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது அரசு ரகசியக் காப்பு விதிகளுக்கு எதிரானது என திமுக தரப்பில் தொடர் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக விளக்கமளிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
