LATEST NEWS
“அய்யோ காப்பாத்துங்க… அலறித் துடித்த மனைவி… லிஃப்ட்டுக்கும் சுவருக்கும் நடுவுல தலைகீழா தொங்கிய உயிர்… சுவரை உடைத்து மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்..!!
ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள அஞ்சநேயா நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 40 வயதான முரளி என்பவர், தனது மனைவியுடன் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினார். லிஃப்ட் இரண்டாவது மாடியை அடைந்து அவர் வெளியே வர முயன்றபோது, மூன்றாவது மாடியிலிருந்த ஒருவர் லிஃப்ட் பொத்தானை அழுத்தியுள்ளார். பழமையான கிரில் டைப் லிஃப்ட்டின் சென்சார் சரியாக வேலை செய்யாததால், கதவு முழுமையாக மூடுவதற்கு முன்பே லிஃப்ட் திடீரென மேல்நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. இதில் முரளியின் ஒரு கால் லிஃப்ட்டின் உள்ளேயும் மற்றொரு கால் வெளியேயும் சிக்கிக் கொள்ள, அவர் லிஃப்ட், கிரில் மற்றும் சுவருக்கு இடையே தலைகீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது.
முரளியின் மனைவி அலறியதைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் உதவிக்கு ஓடிவந்தனர். உள்ளூர்வாசிகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், காலை 9:15 மணிக்கு HYDRA கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், கூகட்பள்ளியில் தயாராக இருந்த ஹைதராபாத் பேரிடர் மேலாண்மை குழுவினர் மார்ஷல் ஜே.டி.வி. பிரசாத் தலைமையில் காலை 9:30 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலைமையின் தீவிரத்தைக் கருதி சனத்நகர் தீயணைப்புப் படைப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிக்கு இடையே சிக்கியிருந்த அவரை மீட்க, HYDRA மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹைட்ராலிக் கட்டர்களைப் பயன்படுத்தி லிஃப்ட்டின் சுவர் மற்றும் கிரில் பகுதிகளை வெட்டி எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காலை 10:50 மணிக்கு முரளி பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் காலில் பலத்த முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த மீட்புப் பணியில் திறம்படச் செயல்பட்ட HYDRA மற்றும் தீயணைப்பு வீரர்களின் சாதுரியமான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
