LATEST NEWS
“ஆதாரத்தை நிரூபி, இல்லையேல் பொதுவெளியில் மன்னிப்பு கேள்” இல்லாவிட்டால்… அமைச்சர் நிர்மல் குமாருக்கு என்.ஆர். இளங்கோ பகிரங்க சவால்..!!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் நிர்மல் குமார் அரசியல் லாபங்களுக்காகவும் இடைத்தேர்தலில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2025 அக்டோபரில் வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதே திமுக ஆட்சியில்தான் என்று என்.ஆர். இளங்கோ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை என்றும், நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் மேல்விசாரணை தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த 150 நாட்களில் 219 பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், சட்டம்-ஒழுங்கைக் கவனிக்காமல் இல்லாத அழுத்தங்களைக் கூறி அமைச்சர் நிர்மல் குமார் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதாகச் சாடியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், தவறினால் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் என்.ஆர். இளங்கோ எச்சரித்துள்ளார்.
