LATEST NEWS
“பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் ஏ.ஐ…” அதிர்ச்சி தரும் புதிய இணைய மோசடி குறித்து சைபர் கிரைம் எச்சரிக்கை….!!
தற்கால டிஜிட்டல் உலகில் இணையவழி முறைகேடுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் வேளையில், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிகளைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது அசுர வளர்ச்சி அடைந்துள்ள ஏ.ஐ. (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலிகள் பல நன்மைகளைத் தந்தாலும், சமூக விரோதிகள் சிலர் இதனைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இத்தகைய நவீனத் தொழில்நுட்ப மோசடிகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் பிரிவு போலீசார் தற்பொழுது அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையப் பக்கங்களில் உலா வரும் மர்ம நபர்கள், போலியான பெயர்களில் சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்கி, தீவிரமாகச் செயல்படும் பெண்களின் சுயவிவரப் பக்கங்களிலிருந்து அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றிப் பதிவிறக்கம் செய்கின்றனர்.
அதன் பின்னர், செயற்கை நுண்ணறிவு மூலம் அந்தப் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சம்பந்தப்பட்ட பெண்களுக்கே அனுப்பிப் பாலியல் ரீதியான மிரட்டல்களை விடுப்பதோடு, பெருமளவில் பணமும் பறித்து வருகின்றனர். எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் இது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபட்டால், பயப்படாமல் அதுகுறித்த ஆதாரங்களுடன் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளிக்கலாம் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
