CRIME
தற்கொலையா? கொலையா?.. மொட்டை மாடியில் செருப்பு… கீழே சடலம்… சிசிடிவியில் சிக்கிய அந்த ‘புதிர்’ நிமிடம்.. டெல்லியை உலுக்கிய புதுப்பெண்ணின் மர்ம மரணம்..!!
தெற்கு டெல்லியின் லோதி காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சனிக்கிழமை மாலை 28 வயது மதிக்கத்தக்க அக்ரிதி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அக்ரிதி, கடந்த ஏப்ரல் 24 அன்று அரசு சிக்கா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு புஷ்ப் விஹாரில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று மாலை என்.டி.எம்.சி பாலிகா குஞ்ச் குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்ரிதியின் கைப்பை, மொபைல் போன் மற்றும் காலணிகள் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மீட்கப்பட்டதால், அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் முதலில் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் அந்த வளாகத்திற்குள் தனியாக நுழைவது பதிவாகியுள்ளது. இருப்பினும், சத்தர்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர், மெட்ரோ ரயில் மூலம் சாகேத் சென்றுவிட்டு, யாருமே அறியாத வகையில் லோதி காலனிக்கு ஏன் சென்றார் என்பது போலீஸாருக்கு பெரும் புதிராக நீடிக்கிறது. மேலும், அந்த குடியிருப்பில் அவருக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுபுறம், அக்ரிதியின் மரணத்தில் தற்கொலைக்கான வாய்ப்பை அவரது குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். சம்பவத்தன்று மதியம் கூட அவர் தனது சக ஊழியர்களுக்கு விருந்தளித்து மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அவர் விழுந்து கிடந்த இடத்தில் ரத்தக் கறைகள் எதுவும் இல்லை என்றும் கூறி மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், அவரது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் கொடுத்த வரதட்சணை அல்லது குடும்பத் துன்புறுத்தல் காரணமாகவே இந்த விபரீதம் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தெற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆனந்த் மிட்டல், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
