LATEST NEWS
பனையூரில் அரங்கேறிய ரகசிய டீல்?.. அறிவாலயத்தை அதிரவைத்த அந்த ‘ஒற்றைத் தகவல்’.. ஓபிஎஸ்ஸின் அந்த ரகசிய முடிவு என்ன?.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் பரபரப்புகள்..!!
தேனி மற்றும் சென்னை அறிவாலய வட்டாரங்களில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஆனால், கட்சியில் இணைந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், தனக்கு இதுவரை எந்தவொரு முக்கிய கட்சிப் பொறுப்போ அல்லது நிர்வாகப் பொறுப்போ வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மகனுக்காக பதவி கேட்டு திமுக தலைமையை அணுகியபோது, “கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்” என தலைமை கைவிரித்ததால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கட்சிக்கு இழுக்கும் மறைமுகப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் தவெக, மாவட்ட அளவில் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க பனையூர் வட்டாரம் மூலம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை வளைக்கும் பணியில் இறங்கியுள்ள தவெக, குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கு மிக்க சீனியரான ஓபிஎஸ்ஸை குறிவைத்துப் பேசி வருகிறது.
தற்போது தமிழக வெற்றிக் கழகமானது ஒரு ‘மினி அதிமுக’ போல மாறி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதும் அளவுக்கு, ஏற்கனவே கரூர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன்னரே தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விஜய்யின் அமைச்சரவையில் சிட்டிங் அமைச்சராக இருக்கிறார். இந்த வரிசையில் ஓபிஎஸ் தவெகவில் இணைந்தால் அவருக்கு கட்சியில் ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவியோ அல்லது இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் அமைச்சர் பதவியோ தரப்படும் என தவெக தரப்பில் தூது விடப்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸை விட அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தவெகவில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், இவர்களின் இறுதி முடிவு என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் தேனியிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
