LATEST NEWS
காங்கிரஸில் வெடித்தது அடுத்த மோதல்..! கோஷ்டி இருந்தால்தான் கட்சி வளரும்..! மாணிக்கம் தாகூர் கட்டுப்பாட்டுக்கு எதிராகத் திருநாவுக்கரசர் அதிரடி..!!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், கட்சியில் இனி கோஷ்டி அரசியல் இருக்காது என்றும், போஸ்டர்களில் ராகுல் காந்தியின் படத்தை மட்டும் பெரிதாகப் போட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர், “கோஷ்டிகள் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி வளரும்” என்று அதற்கு மாறாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மகாபலிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸில் காந்தி மற்றும் காமராஜர் காலத்திலிருந்தே கோஷ்டிகள் இருந்து வருவதாகவும், அதைத் தவிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்கள் தங்களுக்கான தேவைகளுக்காகத் தலைவர்களைச் சந்திப்பதன் மூலமும், ஒவ்வொரு தலைவருக்கும் ஆதரவு வட்டம் பெருகுவதன் மூலமுமே கட்சி வளரும் என்றும், யாரையும் பார்க்கக் கூடாது அல்லது படங்களை அச்சிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆரின் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், போஸ்டர்களில் ராகுல் காந்தி படத்துடன் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய தலைவர்களின் படங்களையும் போட வேண்டும் என்றார். அப்போதுதான் நிர்வாகிகள் மக்களிடமும் அதிகாரிகளிடமும் பிரபலமாகி, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க போலக் கடைக்கோடி நிலை வரை அமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாநிலத் தலைமை கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், திருநாவுக்கரசரின் இப் பேச்சு மாவட்டத் தலைவர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
