LATEST NEWS
இந்தியாவுக்கு எதிராக மெகா சதி..! “பாகிஸ்தானில் இருந்து 10,000 பயங்கரவாதிகளை அனுப்பினோம்” பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மதகுரு… உலக அரங்கில் மீண்டும் நாறும் பாக்.!!
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பியதாக மதகுரு நசீர் மத்னி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தின் மேடை பிரசாரத்தின் போது அவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு உள்ள பங்கினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்ட பல முக்கிய பயங்கரவாத தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய ஹபீஸ் சயீதை, கடந்த 2008ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. குறிப்பாக, 166 பேரின் உயிரைப் பறித்த 2008 மும்பை தாக்குதல் மற்றும் சமீபத்தில் 2025 ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக ஜம்மு நீதிமன்றம் சயீதுக்கு எதிராக ஏற்கனவே ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையும் பிறப்பித்துள்ளது.
மதகுரு மத்னியின் இந்த பகிரங்க ஒப்புதல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை மீண்டும் உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற விவாதம் தற்பொழுது தீவிரமடைந்துள்ளது.
