LATEST NEWS
ஆந்திராவில் நடுங்க வைக்கும் பயங்கரம்.. ஜூலையில் கணவருக்கு விஷ ஊசி… ஆகஸ்ட்டில் குடும்பத்தோடு ஆற்றில் குதிப்பு… தற்கொலை முடிவுக்குப் பின்னால் மர்ம நபரின் பிளாக்மெயில் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள கோதாவரி ஆற்றில், பிதாபுரத்தில் பஞ்சாயத்து ராஜ் உதவிச் செயற்பொறியாளராகப் பணிபுரியும் நுக்கராஜு என்பவர் தனது குடும்பத்துடன் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயா என்ற சிறுவன் ஆற்று நீரில் நீந்தி வந்ததைக் கண்டு, அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் அவனை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், தாத்தா நுக்கராஜுவின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் தாய் சௌஜன்யா மற்றும் பாட்டி மீனா ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நுக்கராஜு மற்றும் அவரது மகள் சௌஜன்யா எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக்கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி ஏமாற்றிய ஒரு நபர், வங்கியின் விவரங்கள், பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு தங்களை விடாமல் மிரட்டி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதுடன், தங்களை மதம் மாறுமாறும் சட்டவிரோதமாகக் கடும் நெருக்கடியும் அழுத்தமும் கொடுத்து வந்ததாகக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் சோகச் சம்பவத்திற்குப் பின்னணியாக சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஷ் ரெட்டியின் மரணமும் பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் உயிரிழந்த ஜெகதீஷின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவருக்கு நச்சு ஊசி போடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தந்தை பாஸ்கர் ரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், இந்தத் தற்கொலை முயற்சியுடன் சேர்த்து ஜெகதீஷ் ரெட்டியின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்தும் ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் புதிய கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
