CRIME
“அடப்பாவி.. காதலித்து கரம் பிடித்த கணவனே எமன்..” கூலிப்படை ஏவி கர்ப்பிணி மனைவியை வக்கீல் கணவன் செய்த கொடூர காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காப்பீட்டுப் பணத்திற்காக, கர்ப்பிணியான தனது மனைவியை வாடகைக்கொலையாளிகளை வைத்து கணவனே விபத்து நாடகமாடிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 31 வயதான கவிதா சவுத்ரி மற்றும் பிரயாஸ் பாண்டே ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். பிரயாஸ் பாண்டே சட்டப் படிப்பு படித்து நோட்டரி வேலை செய்து வந்த நிலையில், கவிதாவின் பெயரில் இருக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டங்களை அறிந்து, அந்தப் பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் கொலைக்காகத் தனது கடையில் வேலை செய்யும் மான்சிங் லோதி என்பவருடன் இணைந்து பிரயாஸ் ஒரு திட்டத்தைத் தீட்டினார். இதன்படி விக்ரம் அஹிர்வார், தனிராம், ராம்ஜி சவுத்ரி ஆகிய மூன்று வாடகைக்கொலையாளிகளை ரூ. 70,000 முதல் ரூ. 80,000 வரை பணம் கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார். திட்டமிட்டபடி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு, தனது மனைவியை ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக வரவழைத்து, வாடகைக்கொலையாளிகள் மூலம் பிக்கப் வாகனத்தைக் கொண்டு மோதி, அதை ஒரு சாதாரண சாலை விபத்து போலக் காட்டி கவிதாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
முதலில் இதனை விபத்து என்று நினைத்த போலீசாருக்கு, தொழில்நுட்ப விசாரணையின் மூலம் சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண்கள் சிக்கியதால் உண்மை தெரியவந்தது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கவிதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது உறுதியானது. கவிதாவின் பெயரில் சுமார் 25 லட்சம் மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி உள்ளிட்ட காப்பீட்டு பாலிசிகள் இருந்ததே இந்தக் கொலைக்குக் காரணம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கொலையாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் முதன்மைக் குற்றவாளியான கணவன் பிரயாஸ் மற்றும் அவனது கூட்டாளியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
