LATEST NEWS
என்னது…! ஒரு ஊரே ராணுவமா..?! தாத்தா முதல் பேரன் வரை 4 தலைமுறையா எல்லையைக் காக்கும் ‘மிலிட்டரி மாதவரம்’..! இந்திய ராணுவத்தின் கேடயமாகத் திகழும் ஒரு விசித்திரக் கிராமம்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘மாதவரம்’ கிராமம், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தங்கள் உயிரையும் பணைய வைக்கும் வீரர்களின் பூமி ஆகும். அரசு ஆவணங்களில் இதன் பெயர் மாதவரம் என்று இருந்தாலும், ராணுவத்திற்கு அளித்துள்ள இணையற்ற பங்களிப்பின் காரணமாக நாடு முழுவதும் இக்கிராமம் மரியாதையுடனும் பெருமையுடனும் ‘மிலிட்டரிமாதவரம்’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர்வது வெறும் வேலை வாய்ப்பு மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்க்கை முறை. தாத்தா, தந்தை, பேரன் என மூன்று முதல் நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் நடந்த பிரிட்டிஷ் காலம் தொட்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய எல்லைப் போர்கள் மற்றும் மோதல்கள் வரை அனைத்துக் களங்களிலும் இக்கிராமத்து வீரர்கள் தங்களது ரத்தத்தைச் சிந்தி தாய்நாட்டைக் காத்துள்ளனர். காலம் மாறினாலும் இக்கிராமத்து இளைஞர்களிடம் உள்ள தேசபக்திச் சுடரும் வீரமும் சிறிதும் குறையவில்லை. இங்கிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களே பொறுப்பெடுத்துக்கொண்டு, கிராமத்து இளைஞர்களுக்குத் தேவையான உடற்பயிற்சிகளையும் மனஉறுதியையும் அளித்து ராணுவ ஆட்சேர்ப்புக்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகளின் நினைவிடம் தினமும் இங்கிருக்கும் குழந்தைகளுக்குப் தேசபக்தியைக் கற்றுத் தருகிறது. விவசாயம் செய்யும் எளிய வீடுகளிலும் கூட, சுபேதார்கள் மற்றும் லெப்டினன்ட்களின் வீரக் கதைகள் பெருமையுடன் பேசப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு மற்றும் தாய்நாட்டுப் பற்றில் இக்கிராமம் முழு இந்தியாவுக்குமே ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நாட்டின் எல்லைக்காகத் தங்களது மகன்களை மகிழ்ச்சியோடு அனுப்பும் இத்தகைய கிராமங்களே தேசத்தின் உண்மையான கேடயம் என்று கிராம மக்களும் ராணுவ நிபுணர்களும் கருதுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ராணுவ வீரர்களைக் வழங்கி வரும் ‘மிலிட்டரி மாதவரம்’, கட்டுப்பாடு, தியாகம் மற்றும் உண்மையான தேசபக்தியின் வாழும் உதாரணமாக விளங்குவதோடு, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.
