LATEST NEWS
“பூனை சைஸ்… ஆனால் புலி ரேஞ்சுக்கு அட்டாக்” அமெரிக்காவை அதிரவைத்த மர்ம ஜீவன்… மனிதர்களைத் தேடித் தேடித் தாக்கும் விசித்திர விலங்கு – ஷாக்கிங் வீடியோ..!!
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் மக்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் ஒரு மர்ம விலங்கால் உள்ளூர் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் லெபனான் நகரில் 48 மணி நேரத்திற்குள் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அங்குள்ள சென்டெர்ரா பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஓட்டுநரை அந்த விசித்திர விலங்கு பாய்ந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வைரலாகும் அந்த வீடியோவில், புல்வெளியில் இருந்து அதிவேகமாக ஓடிவரும் அந்த விலங்கு, வாகனத்தில் இருந்து இறங்கிய நபரின் பையைப் பிடுங்கி எறிந்து, அவரது கால்களைக் கவ்விப் பிடிக்கிறது. அவர் கடுமையாகப் போராடி அந்த விலங்கின் பிடியை உதறித் தள்ளியதும், அது மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைகிறது. தாக்குதல் நடத்தியது எந்த வகையான விலங்கு என்பதைப் போலீசாரால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், அது வீட்டுப் பூனையின் அளவில் இருக்கும் ஒரு சாம்பல் நிற நரியாகவோ அல்லது ‘ஃபிஷர் கேட்’ எனப்படும் மரநாய் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பொதுவாக வன விலங்குகள் மனிதர்களைத் தேடி வந்து தாக்குவது இயல்பானதல்ல என்பதால், அந்த விலங்கு ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான இந்த ரேபிஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கடியுண்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் மூலம் அந்த விசித்திர விலங்கைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவல்துறை, பொதுமக்கள் புதர்கள் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
