LATEST NEWS
ஐயோ கொடுமையே…! ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த வழியில்லை… மனைவியின் உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து தவித்த கணவன்… தாயின் உடலருகே கதறிய 8 வயது மகள்..! ஜான்சி மருத்துவமனையில் அரங்கேறிய கோரக் காட்சி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரியில் இருந்து சுகாதார அமைப்பின் அவல நிலையையும் ஏழை குடும்பங்களின் துயரத்தையும் சுட்டிக்காட்டும் வகையிலான மிகக் கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் ஆதிவாசி தனது மனைவி ராம்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராம்வதி உயிரிழந்தார். இறப்புக்குப் பிறகு, மனைவியின் உடலைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அவரிடம் போதிய பணம் இல்லாததால், தனியார் வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்ய முடியாமல் தவித்துள்ளார்.
பணம் இல்லாத காரணத்தினால், ராகுல் தனது மனைவியின் உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவக் கல்லூரியின் அவசரப்பிரிவு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்துக்கொண்டு உதவிக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். இந்த சோகமான தருணத்தில், அவரது 8 வயது சிறுமியான மகள் நந்தினி, தாயின் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்தார். பெய்து கொண்டிருந்த மழையிலும், தாயின் உடலுக்கு அருகில் அந்தச் சிறுமி அழுதுகொண்டிருந்த இந்தக் காட்சியும், ஏதுமற்ற நிலையில் உதவிக்காகக் காத்திருந்த தந்தையின் நிலையும் அங்கே இருந்த அனைவரையும் கலங்க வைத்ததுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்த இந்தக் குடும்பத்தைக் கண்ட மருத்துவக் கல்லூரி காவல் சாவடியைச் சேர்ந்த அஜய் என்ற காவலர், உடனடியாக அவர்களிடம் விசாரித்து நிலைமையை அறிந்துகொண்டார். அவரே முன்வந்து ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து ராம்வதியின் உடலை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவக் கல்லூரியின் முதன்மை மருத்துவ அதிகாரி சச்சின் மாஹோர், “நோயாளி இறக்கும் பட்சத்தில் உறவினர்கள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே இறப்பிற்கான வாகனங்கள் வழங்கப்படும், ஒருவேளை இவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்காமல் இருந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளதுடன், இந்தத் தாமதத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
