LATEST NEWS
“அய்யோ பார்த்தாலே பதறுது… அதிவேக கார் மோதி 30 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட நபர்… நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!”
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பகதூர்கே சாலையில் வியாழக்கிழமை மாலை அதிவேகமாக வந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில், கார் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு காற்றில் பல அடி உயரத்திற்குப் பறந்து சென்று விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்து மாலை 4 மணியளவில் நடந்துள்ளது. அதிவேகமாக வந்த வெள்ளை நிற டாடா டியாகோ EV கார், முதலில் ஒரு பைக் மீதும், அதைத் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஈ-ரிக்ஷா மீதும் மோதியுள்ளது. இந்த மோதலின் வீரியத்தால், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்பட்டு, பலமுறை சுழன்று சுமார் 30 அடி தூரத்தில் போய் விழுந்துள்ளார். இதில் அந்த மோட்டார் சைக்கிளும் கடுமையாக சேதமடைந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தொடர்ந்து சென்று, எதிரே வந்த மேலும் இரண்டு ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டர் மீதும் மோதியது. இதில் ஒரு ஈ-ரிக்ஷா சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 5 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக லூதியானா சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஜதிந்தர் என்ற பாதசாரிக்கு காலில் எலும்பு முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. மற்ற காயமடைந்த சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் காரை நிறுத்தியதும், உள்ளூர் மக்கள் கார் ஓட்டுநரைப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர் மது அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சேலம் தப்ரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
