LATEST NEWS
அடக்கடவுளே.. திடீரென வெடித்துச் சிதறிய செங்கல் சூளை… தூக்கி வீசப்பட்ட 2 சிறுவர்கள்..! ஆடு மேய்க்கப் போன இடத்தில் நடந்த கொடூரம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் ஷேர்கோட் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்பூர் கிராமத்தில், மூடப்பட்ட செங்கல் சூளைக்கு அருகே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5:30 மணியளவில், வாஜித்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரவீர் சிங் என்பவரின் மகன்களான ரோஹித் (16) மற்றும் ரோஹன் (12) ஆகிய இரு சிறுவர்களும் தங்களது ஆடுகளுக்குப் புல் அறுப்பதற்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பாதை வழியே சென்றபோது அங்கு கிடந்த பட்டாசு கழிவுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், இரு சகோதரர்களும் பலத்த தீக்காயமடைந்து படுகாயமடைந்தனர்.
வெடிச்சத்தம் கேட்டவுடன் அருகில் உள்ள வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த கிராம மக்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களையும் மீட்டு, காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சிறுவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு பிஜ்னோர் மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவக் கல்லூரிக்கும் தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
தகவலறிந்ததும் சப்-டிவிஷனல் மெஜிஸ்ட்ரேட் நிதின் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் அஞ்சனி குமார் சதுர்வேதி மற்றும் ஷேர்கோட் காவல் நிலையப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடயவியல் குழு மற்றும் தீயணைப்புப் படையினரும் சோதனையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 300 முதல் 400 மீட்டர் தொலைவில் ஒரு பட்டாசு ஆலை அமைந்துள்ளது. சமீபத்தில் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்குப் பயந்து, இந்த ஆலை நிர்வாகம் பட்டாசு கழிவுகளைச் செங்கல் சூளை அருகே இரகசியமாகக் கொட்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் மற்றும் சரக்கு இருப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் (DM) ஜஸ்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.
