LATEST NEWS
“பக்குவமா பேசுங்க ஐயா” மாட்டுக்கறி பத்தி பேசிய அமைச்சர் வன்னி அரசு… கடுமையாக கண்டித்த தவெக தலைமை…!!
தலித் மற்றும் ஓபிசி (OBC) அரசியல் ரீதியாக ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு , தற்போது புதிதாக உருவெடுத்துள்ள மாட்டுக்கறி விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமையிலான கூட்டணியில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் விசிகவின் வன்னி அரசு, அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியது.
குறிப்பாக, தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள கொங்கு மற்றும் தென் மாவட்ட இடைத்தேர்தல்களில், இந்த மாட்டுக்கறி விவகாரம் தவெகவின் சமூக ரீதியிலான வாக்குகளைப் பிரித்து சரிவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகளும், பிற அமைப்புகளும் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் குரல்களை எழுப்பத் தொடங்கின. இதனால் தவெகவின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கட்சிக்குள் எழுந்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தவெக தலைமை, அமைச்சர் வன்னி அரசுக்கு “பக்குவமாகப் பேசுங்கள்” என உள்கட்சி ரீதியாகக் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தேவையில்லாத சர்ச்சைக் கருத்துக்களைத் தவிர்த்து, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் பொறுப்புடன் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தவெக தலைமை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அரசு விடுதி உணவுப் பட்டியலில் தற்போதைய நிலையே தொடரும் என்றும், மாட்டிறைச்சி சேர்க்கப்படாது என்றும் அமைச்சர் வன்னி அரசு தற்போது விளக்கமளித்து இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
