LATEST NEWS
“சாவுக்கு அஞ்சவில்லை” விமானத்தை மோதி அழிக்கவே ஆசைப்பட்டேன்… 29 வயது ஃப்ளைதுபாய் துணை விமானியின் பரபரப்பு வாக்குமூலம்..!!
விமானத்தை மோதி அழிக்க விரும்பியதாகவும், தான் மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் ஃப்ளைதுபாய் (Flydubai) நிறுவனத்தின் துணை விமானி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த துணை விமானி, நடுவானில் விமானத்தின் கேப்டனைத் தாக்கிவிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது விமானத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், சக ஊழியர்களும் பயணிகளும் இணைந்து அவரை மடக்கிப் பிடித்து பெரும் விபத்தைத் தடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தற்போது காவலில் இருக்கும் ஹம்மாமியிடம், இது ஒரு பயங்கரவாதச் செயலா என்ற கோணத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரின் போது அங்கு தங்கியிருந்த இவருக்கு ஏதேனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஹம்மாமியின் இணைய செயல்பாடுகள் மற்றும் நீக்கப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இணைய ஆவணக் காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட அவரின் பதிவுகளில், தீவிர மதக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக அவர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. நடுவானில் பயணிகளின் உயிரைப் பறிக்கத் துணிந்த துணை விமானியின் இந்த வாக்குமூலம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
