LATEST NEWS
“எங்களைத் தூக்கிலிட்டாலும் சரி..” வந்தே மாதரத்தை முழுசா பாட முடியாது… வந்தே மாதரம் சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் சவால்…!!
சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சை, தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அங்கு பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல் இரண்டு சரணங்களைத் தாண்டி நீண்டபோது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அதை நிறுத்தும்படி சைகை காட்டினார். தேசிய பாடலை முழுமையாகப் பாடவிடாமல் சோனியா காந்தி தடுத்ததாக பாஜக உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சியினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத், காங்கிரஸ் கட்சிக்கு வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடும் பாரம்பரியம் எப்போதும் உண்டு என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “அவர்கள் எங்களைத் தூக்கிலிட்டாலும் சரி, வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம்; அதற்கு மேல் ஒருபோதும் பாட மாட்டோம்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலம், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’வை அவமதித்து வருவதாக ஹரிபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். சங் பரிவார் அமைப்புகள் வந்தே மாதரத்தைத் தேசிய கீதமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் மாநாடுகளில் எப்போதுமே முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
