LATEST NEWS
வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை..! மத்திய அரசு அதிரடி மசோதா திட்டம்..!!
மத்திய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படுவதை ஏற்கனவே மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் மத்திய அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இப்பாடல் கண்டிப்பாக இசைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஒரு பிரத்யேக மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய சட்ட திட்டத்தின்படி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதைத் தடுப்பவர்கள், அதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் அல்லது பாடலை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட உள்ளது.
தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தையும் மரியாதையையும் வந்தே மாதரம் பாடலுக்கும் உறுதிப்படுத்தும் நோக்கோடே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான சிறைத்தண்டனை சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
