CRIME
“அய்யோ கடவுளே..! தம்பி மூழ்குவதைப் பார்த்து கதறிய அக்காக்கள்!” காப்பாற்றச் சென்ற 3 பெண்களுக்கும் குளத்திலேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம், தோல்ப்பூர் மாவட்டத்தின் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோயில் திருவிழாவிற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரவி குமார் (21) என்பவர் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார். அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது சகோதரிகளான மனோரமா (22), போட்டோ (25) மற்றும் உறவினர் பெண்ணான நிஷா (18) ஆகிய மூவரும் குளத்தில் குதித்துள்ளனர். ஆனால், நீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் அவர்களாலும் கரை திரும்ப முடியவில்லை. இறுதியில், ரவி குமார் உட்பட நான்கு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான மீட்புக் குழுவினர் கிராம மக்களின் உதவியோடு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மூன்று பெண்களின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ரவி குமாரின் உடல் சுமார் 6 மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல நீரில் மூழ்கித் தவித்த மேலும் நான்கு பக்தர்களைக் கிராம மக்கள் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பத்திரமாக மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பண்டிகை நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
