CRIME
“ஹேப்பி பர்த்டே டூ யூ.. உன்னை கொல்லப் போறோம்” சொன்னபடியே சிறையில் இருந்து வந்த 2 நாளில்… இன்ஸ்டாகிராம் பகையில் நேர்ந்த கொடூரக்கொலை..!!!
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாகுல் அமீது என்ற இளைஞர், அங்குள்ள மயானப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஷாகுல் அமீது மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கும், கஞ்சா விற்பனை வழக்கும் நிலுவையில் உள்ளதும், அவர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதிதான் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யார் பெரியவர் என இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பகுதியில் தங்களது ஆதிக்கத்தைக் காட்டுவதற்காக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிடுவதில் ஷாகுல் அமீதுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அப்துல், அருண் மற்றும் கொளத்தூர் ஜெய் ஆகிய குற்றப்பின்னணி கொண்ட கும்பலுக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்தக் கும்பல் ஷாகுல் அமீதை கத்தியால் வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஷாகுல் அமீதின் பிறந்தநாளன்று, “உன்னை உன் பிறந்தநாளிலேயே கொலை செய்வோம்” என எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், அந்தச் சமயத்தில் அவர் கஞ்சா வழக்கில் சிறையில் இருந்ததால் தப்பியுள்ளார். நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் மயானப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, பழிவாங்கக் காத்திருந்த எதிர்த்தரப்பு கும்பல் திட்டமிட்டுச் சூழ்ந்து அவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்து தப்பியோடியுள்ளது. தற்போது கேளம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
