CRIME
“குழந்தை பிறந்தநாளுக்கு 20 சவரன் நகை எங்கே?” நீ இனி என் வீட்டுக்கு வராத.. உன் அம்மா வீட்லயே இரு… கணவனின் கடைசி போன் கால்.. திருமணமாகி 2 ஆண்டுகளிலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!!
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது புவனேஸ்வரி என்ற பட்டதாரிப் பெண், தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் முதல் மாணவியாக வந்தவரும், ஆசிரியையாகப் பணியாற்றியவருமான இவருக்கும், செங்கல்பட்டு ஈச்சாங்கரணியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 50 சவரன் நகை போட்ட நிலையிலும், மாப்பிள்ளை வீட்டாரால் கூடுதலாக 200 சவரன் நகை கேட்டு புவனேஸ்வரி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்ந்து வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் ஆண் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவின் போது, குழந்தைக்கு 20 சவரன் நகை போடுமாறு கணவர் வீட்டார் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், புவனேஸ்வரியின் தாயாரால் 2 சவரன் மட்டுமே போட முடிந்ததால் கணவன்-மனைவி இடையே பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், புவனேஸ்வரி தன் ஊர் கோவில் திருவிழாவைக் காரணம் காட்டி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று மாலை கணவரிடம் போனில் பேசியபோது, “நீ இனி வீட்டிற்கு வர வேண்டாம்; உங்க அம்மா வீட்டிலேயே இரு” என்று அவர் கறாராகக் கூறியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, குழந்தையைத் தாலாட்டும் புடவையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவில் திருவிழா முடிந்து வீடு திரும்பிய தாயும் உறவினர்களும் கதவை உடைத்துப் பார்த்தபோது புவனேஸ்வரி சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறியுள்ளனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி இரண்டே வருடங்கள் ஆவதால் இந்த வழக்கு கிண்டி கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தாய் குமுதா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
