LATEST NEWS
“என்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா..?” போனில் வந்த ஒரே ஒரு மிரட்டல்..! தற்கொலை செய்து கொண்ட 20 வயது கல்லூரி மாணவி..!!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் – அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருந்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததை அறிந்த அந்த வாலிபர், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு “என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாயா?” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீ தர்ஷினி, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற நிலையில், நேற்று காலையில் படுக்கையில் விஷம் குடித்து பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், காதலித்த வாலிபர் அவரை மிரட்டியது தெரியவந்தது. அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
