CRIME
கலிகாலம்..! 13 வயது சிறுவனை குத்தி கொலை செய்த 15 வயது சிறுவன்… விளையாட்டில் ஏற்பட்ட சாதாரண மோதலில் நடந்த பயங்கரம்… அதிரவைக்கும் கொடூரம்..!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் செக்டர்-56 பகுதியில், விளையாடும் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் 15 வயது சிறுவன் ஒருவன், 13 வயது சிறுவனைச் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் கன்னூ (13) ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் என்றும், அவனது குடும்பம் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்தது என்றும் அவனது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் கன்னூ தனது வீட்டின் முன்பு தனது 1 வயது தங்கையை விளையாட வைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 15 வயது சிறுவனும் அவனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான். விளையாட்டின் போது ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கன்னூவின் நெஞ்சுப் பகுதியில் பலமாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
நெஞ்சில் பலத்த காயமடைந்த சிறுவனை அண்டை வீட்டாரின் உதவியோடு அவனது குடும்பத்தினர் உடனடியாகப் பாதுஷா கான் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள செக்டர்-58 காவல் துறையினர், கொலை செய்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
