CRIME
நிர்பயா பாணி கொடூரம்..! ஓடும் பேருந்தில் சிறுமியை ஏமாற்றி ..கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர்… டெல்லியில் தூக்கி வீசிவிட்டு தப்பியோட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பின் காரணமாகத் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டுள்ளார். ஆனால், கனமழை மற்றும் இருளுக்கு இடையே இரவு 9 மணியளவில் அவர் தவறான இடமான கிரேட்டர் நொய்டாவின் பாரி சௌக் பகுதியில் இறங்கித் தவித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு தனியார் சொகுசு படுக்கை வசதி கொண்ட பேருந்தின் நடத்துனர், தாங்களும் நொய்டா செக்டர் 63-க்குத் தான் செல்வதாகக் கூறி அச்சிறுமியைப் பேருந்தில் ஏற்றியுள்ளார்.
பேருந்து நகரத் தொடங்கியதும் பயணிகள் யாரும் இல்லாத அந்தப் பேருந்தில், ஓட்டுநர் குல்தீப் (39) மற்றும் நடத்துனர் சந்தீப் (26) ஆகிய இருவரும் அச்சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். சிறுமி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, ஓடும் பேருந்திலேயே இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதிக்கு அருகே சிறுமியைத் தூக்கி வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் நொய்டா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பேருந்துக்குள் இருந்த திரைகள் மற்றும் படுக்கை வசதிகளைப் பயன்படுத்தி இந்தத் துரோகம் அரங்கேறியதை தடயவியல் குழுவினர் உறுதி செய்தனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், டெல்லி திமார்பூர் வாகன நிறுத்தத்தில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து, அந்தப் பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
