CRIME
என்னை காதலி…! மறுத்த 11-ம் வகுப்பு மாணவி… கழுத்தை அறுத்த வாலிபர்..! சிதம்பரத்தில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை, அய்யப்பன் அந்த மாணவியின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் தனது காதலைக் கூறி, தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்ததோடு, அய்யப்பன் அத்துமீற முயன்றதால் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன், தான் கையில் வைத்திருந்த பிளேடால் அம்மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாகச் சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
