LATEST NEWS
அதிசயம்… ஆனால் உண்மை..! ஆபத்தை முன்கூட்டியே கணித்த ஆறாம் அறிவு… மரண வாசலில் இருந்து மீண்ட நாய்..!!!
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று, வரவேற்பறை மேற்கூரை இடிந்து விழுவதற்கு சில நொடிகள் முன்பு அங்கிருந்து சாதுரியமாக தப்பித்து உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் வியப்பூட்டும் சம்பவம் அங்குள்ள வீட்டுப் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சம்பவத்தின் போது நாயின் உரிமையாளரான கேத்ரின் பாடிஸ்டா ஒரு அலுவல்முறை பயணமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.
அந்த வீடியோவில், நாய் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது திடீரென மேற்கூரையில் இருந்து லேசான விரிசல் சத்தமும், அதிர்வும் ஏற்படுகிறது. இதனைத் தனது கூர்மையான கேட்கும் திறன் மற்றும் உள்ளுணர்வால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்த நாய், உடனடியாக உஷாராகி சோபாவை விட்டு இறங்கி அந்த அறையை விட்டு வெளியேறுகிறது. நாய் வெளியேறிய அடுத்த சில நொடிகளிலேயே, அந்த அறையின் மேற்கூரை மொத்தமாக இடிந்து தரைமட்டமாகி கீழே விழுகிறது.
https://twitter.com/i/status/2071754815961550990
நாயின் இந்த அசாத்தியமான சமயோசித புத்தியைக் கண்டு இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர். “மனிதர்களை விட நாய்களுக்கு கேட்கும் திறன் நான்கு மடங்கு அதிகம் என்பதால் தான் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து தப்பியுள்ளது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், நாய் எந்தவொரு காயமுமின்றி பத்திரமாக உயிர் தப்பியது அதன் உரிமையாளருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
