LATEST NEWS
இந்த மலைக்கு மட்டும் போயிடாதீங்க?பூமிக்கு அடியில் இருந்து வரும் தங்க மழை..! நாசா விஞ்ஞானிகளே மிரண்டு போன உண்மை..!
அண்டார்டிகாவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற எரிமலை, ஒவ்வொரு நாளும் சுமார் 80 கிராம் அளவிலான தங்கத் துகள்களைக் காற்றில் பரவச் செய்து வருவது உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஏறக்குறைய 10 சவரன் தங்கத்திற்கு நிகரானதாகும். உலகின் தென் பகுதியில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இந்த எரிமலையானது, நிரந்தரமான லாவா ஏரியைக் கொண்டுள்ளதோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த அரிய நிகழ்வை நிகழ்த்தி வருகிறது.
நாசா மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, இந்த எரிமலை மூலம் ஓராண்டில் உமிழப்படும் தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் பல கோடிகளைத் தாண்டும் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் துகள்கள் வெறும் தூசியாக இல்லாமல், சுமார் 60 மைக்ரோமீட்டர் அளவுள்ள சிறிய நேர்த்தியான தங்கப் படிகங்களாகவே வெளியேறுகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, இங்கிருந்து வெளியாகும் தங்கம் காற்றில் கலந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து சென்று, அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் முழுவதும் படிகின்றன.
எரிமலைகள் தங்கம் உமிழ்வது அறிவியல் உலகிற்கு முற்றிலும் புதிய செய்தியல்ல. பூமியின் ஆழத்தில் காணப்படும் தங்கம், அதீத வெப்பத்தின் காரணமாக சல்பர் மற்றும் குளோரின் போன்ற வாயுக்களோடு இணைந்து மேற்பரப்பை நோக்கி தள்ளப்படுகிறது. இந்த வெப்ப வாயுக்கள் குளிர்ந்த வளிமண்டலக் காற்றோடு கலக்கும் போது, தங்கம் தனித்துப் பிரிந்து படிகங்களாக மாறுகிறது. மவுண்ட் எரபஸ் மட்டுமின்றி, ஹவாய் மற்றும் இத்தாலியில் உள்ள சில எரிமலைகளிலும் இத்தகைய நிகழ்வுகள் சிறிய அளவில் முன்னரே கண்டறியப்பட்டுள்ளன.
