LATEST NEWS
“கூட்டணி மாறலாம்… ஆனா நட்பு மாறாது!” வைரலாகும் கனிமொழி, ஜோதிமணியின் பாச அணைப்பு… நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சி…!!
தமிழக அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் நிலவுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி கனிமொழியும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் பாசத்தோடு கட்டியணைத்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அரசியல் களத்தில் கூட்டணிகளும் தேர்தல் கணக்குகளும் மாறினாலும், தனிப்பட்ட தோழமையும் மனித உறவுகளும் என்றும் மாறாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இவர்களின் இந்த அன்பான சந்திப்பு இரு கட்சிகளுக்கும் இடையேயான இணக்கமான உறவின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் எல்லைகளைத் தாண்டிய இந்தச் சகோதரி பாசம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, இரு கட்சித் தொண்டர்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
