LATEST NEWS
கணவனின் வேலைக்கு ஆபத்து வைத்தால் ஜீவனாம்சம் கட்..! உச்ச நீதிமன்றத்தின் தடாலடி உத்தரவு..!!!
திருமணக் குடும்பத் தகராறுகளின் போது, கணவரின் பணிபுரியும் நிறுவனத்திற்கு மனைவிகள் புகார் கடிதம் எழுதும் வழக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, “விவாகரத்து கோருவது ஒருபுறம் இருந்தாலும், கணவனின் வாழ்வாதாரத்தையே கெடுப்பது மிகவும் தவறான செயலாகும்” என்று தெரிவித்தது. மேலும், கணவருக்கு வேலை பறிபோனால் அது எதிர்காலத்தில் மனைவிக்குக் கிடைக்க வேண்டிய ஜீவனாம்சக் கோரிக்கையையும் பாதிக்கும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றும் தனது கணவர், சேவை விதிகளை மீறி தனியாகத் தொழில் நடத்துவதாக அவரது மனைவி விமானப்படை அதிகாரிகளுக்குப் புகார் அளித்திருந்தார். இதனால் கணவரின் நண்பர் ஒருவர் மனைவி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை அசாமில் இருந்து உத்தரப் பிரதேசத்திலுள்ள காசியாபாத்திற்கு மாற்றக் கோரி மனைவி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். தான் மற்றும் தன் சகோதரர் மீது விமானப்படை ஹெல்மெட்டைத் திருடியதாகக் கணவர் பொய்ப் புகார் அளித்ததாலேயே தான் அதிகாரிகளைத் தொடர்புகொண்டதாக மனைவி சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கணவரின் நிறுவனத்திற்குப் புகார் அனுப்புவது திருமணப் பிரச்சினைகளில் செய்யக்கூடிய மிக மோசமான விஷயங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டனர். இதையடுத்து, கணவன்-மனைவி இருவருக்குமிடையே உள்ள தகராறுகளைச் சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்காக இந்த வழக்கை ‘உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்திற்கு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியிடம் பேசி அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
