LATEST NEWS
“வீடியோ ஆதாரம் இருந்தா காட்டுங்க பார்ப்போம்!”.. செய்தியாளர்கள் கேள்வியால் கடுப்பான அமைச்சர் விக்னேஷ்.. நேரலையில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழுவின் சான்றிதழ் தாமதத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சியை அமைத்து விஜயும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படம் இது என்பதால், அவரது ரசிகர்களும் தவெக அமைச்சர்களும் இப்படத்தின் ரிலீஸைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்
இந்நிலையில், ஜனநாயகன் படம் பார்ப்பதற்காக முதலமைச்சர் விஜயிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் விடுமுறை கேட்டதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “நான் விடுமுறை கேட்டதாக வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்” எனச் சவால் விடுத்தார். மேலும் சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியதைச் சுட்டிக்காட்டிய அவர், “எங்களுக்குள் இருக்கும் தனி உணர்வு அது; என்னைப் பொறுத்தவரை எங்கள் தளபதி என்றைக்கும் எனக்கு தளபதிதான்” எனத் தெரிவித்தார்.
