LATEST NEWS
“அமெரிக்காவில் பிறந்தா குடியுரிமை உண்டு” டிரம்ப் போட்ட சட்டத்தை சுக்குநூறாக உடைத்த நீதிமன்றம்.. 6-3 வாக்குகளில் வெடித்த அதிரடி தீர்ப்பு..!!
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையைக் குறைக்கும் வகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்திருந்த நிர்வாக உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தன்னிச்சையாகக் குடியுரிமை வழங்கும் 14-வது சட்டத்திருத்தத்தின் நீண்டகால விளக்கத்தை நீதிமன்றம் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் 6-3 என்ற நீதிபதிகளின் வாக்குகள் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, அமெரிக்காவிற்குச் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தன்னிச்சையான குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிறக்கும் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் பெற்றோர்களில் ஒருவராவது அமெரிக்க குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாகவோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார். டிரம்பின் இந்த அதிரடி உத்தரவைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் முழுமையாக நிராகரித்துள்ளது.
ஏற்கனவே, அதிபர் டிரம்ப் பிற உலக நாடுகளுக்கு விதித்த பரஸ்பர கூடுதல் வரி விதிப்பு செல்லாது என்றும், வசூலிக்கப்பட்ட வரியைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அவரது மிக முக்கியமான குடியேற்றக் கொள்கையான பிறப்புரிமைக் குடியுரிமை ரத்து உத்தரவும் நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திற்குப் பின்னடைவாகவும், அங்குள்ள புலம்பெயர்ந்தோருக்குப் பெரும் நிம்மதியாகவும் பார்க்கப்படுகிறது.
