LATEST NEWS
டிஜிட்டல் இந்தியா… வெறும் புளுகு மூட்டை..! மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக… மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!!
மத்திய பாஜக அரசு மேடைக்கு மேடை ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழங்கி வரும் வேளையில், அதன் மௌனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். கல்வி முறையை டிஜிட்டல் ஆக்குவதற்குப் பதிலாக, தேர்வு மோசடித் தொழிற்சாலையைத் தான் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்த்துள்ளது என்றும், ‘டிஜிட்டல் இந்தியா’ என்பது வெறும் புளுகு மூட்டை என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கடுமையாகக் சாடியுள்ளார்.
தரவுகளின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில் தேர்வு முறைகேடுகளில் கேள்வித்தாள் கசிவு மட்டும் 70% ஆக அதிகரித்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இதயமற்ற முறைகேடுகளாலும், தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் பல அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர் என்றும், இது வெறும் பேப்பர் லீக் அல்ல, இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய ராணுவப் படைகளை, கேள்வித்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு இந்த ஆட்சியில் கல்வித்துறை தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘குஜராத் மாடல்’ என்று மார்தட்டும் குஜராத்தில் 2015-க்கு முன் பூஜ்யமாக இருந்த மோசடி வழக்குகள், தற்போது 13 வழக்குகளாகப் பெருகியுள்ளன என்றும், தேசிய அளவில் இந்த வழக்குகள் 27 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்துள்ளதாகவும், இந்த பில்லியன் டாலர் மோசடி நெட்வொர்க்கால் கல்வித்துறை அதிகாரிகளும் முதலாளிகளும் மட்டுமே கோடிகளைக் குவிக்கிறார்கள், மாணவர்களுக்கு மரணமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது என்றும் கூறியுள்ளார். எனவே, “நீங்கள் நடத்துவது அரசாங்கமா அல்லது கேள்வித்தாள் ஆலோசனை மையமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
