CINEMA
“இறப்பு வீடா..? இல்ல போட்டோ ஷூட்டா..? பார்த்திபனை ‘எந்த ரகம்…?’ என வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. ட்விட்டரில் வெடித்த சர்ச்சை..!!!”
திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் தமிழ் திரைத்துறையும் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிப் பின்னர் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் உயர்ந்த பார்த்திபன், தனது குருவின் மறைவால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் முன்னின்று அனைத்து காரியங்களையும் செய்த பார்த்திபன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து பாக்யராஜை நினைவுகூர்ந்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், தனது குருவின் நினைவாகப் பார்த்திபன் வெளியிட்ட சில புகைப்படங்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. பாக்யராஜின் புகைப்படத்திற்கு முன்னால் பார்த்திபன் சோகமாக அமர்ந்திருப்பது மற்றும் நிற்பது போன்ற படங்கள் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தன. இந்தத் புகைப்படங்கள் அனைத்தும் திட்டமிட்டு, வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டது போல் காட்சியளிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.
இவ்விவகாரம் தொடர்பாகப் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனை வன்மையாகச் சாடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இறப்பு வீடு அல்லது இரங்கல் நிகழ்வுகளில் நாம் இயல்பாக சோகமாக இருக்கும்போது மற்றவர்கள் புகைப்படம் எடுப்பது வேறு விஷயம். ஆனால், ஒருவரை ஆள் வைத்து, விதவிதமான ஆங்கிள்களில் சோகமாக இருப்பது போலப் புகைப்படம் எடுத்துக் கொள்வது இறந்தவரைச் சிறுமைப்படுத்தும் செயலாகும். அதனைப் பொதுவெளியில் பகிர்வது அதைவிடவும் கீழான மனநிலை. இதில் பார்த்திபன் எந்த ரகம்?” என்று ப்ளூ சட்டை மாறன் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
