CINEMA
இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு… இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும்.. என கர்நாடக அரசு அறிவிப்பு..!!
தென்னிந்தியாவின் “இசைக்குயில்” என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளனர். இவரின் மறைவு செய்தி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாடகி எஸ். ஜானகியின் மறைவுக்குப் பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், எஸ். ஜானகி அவர்களின் மறைவுக்குத் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, “அவரது பொன்னான குரல் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது” என்று புகழஞ்சலி செலுத்தினார். மேலும், மறைந்த பாடகி எஸ். ஜானகியின் இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் இசை ரசிகர்கள் தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்துவதற்காக, எஸ். ஜானகியின் உடல் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, 4 தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்ற ஒரு மாபெரும் இசை சகாப்தத்தின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
