LATEST NEWS
என்னது…! ஒரு முட்டை இவ்வளவு ரூபாயா..? முட்டை பிரியர்களே உஷார்..! தங்கம் விலையோடு போட்டி போடும் முட்டை விலை..!!!
நாமக்கல் மண்டலத்தில் பண்ணை முட்டை கொள்முதல் விலை, வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு முட்டைக்கு ரூ. 6.65 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில்லறை விற்பனையில் முட்டையின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ. 7.30 வரை விற்பனை செய்யப்பட்டு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் பல முக்கிய காரணங்கள் அமைந்துள்ளன. மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கோழிகளுக்கான தீவனப் பொருட்களின் இறக்குமதிச் செலவும், அவற்றின் உற்பத்திச் செலவும் பெருமளவில் அதிகரித்துள்ளது. அத்துடன் டீசல் விலை உயர்வால் முட்டைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இவற்றுடன் சந்தையில் முட்டைக்கான தேவை தொடர்ந்து சீராக இருப்பதும் இந்த விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
முட்டை விலை உயர்வு நுகர்வோருக்குச் சுமையாக மாறியிருந்தாலும், பண்ணையாளர்கள் தரப்பில் இது அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடுமையான தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்திச் செலவைச் சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பண்ணையாளர்களுக்கு, இந்த கொள்முதல் விலை உயர்வு சற்றே நிம்மதியைத் தந்துள்ளது. எனினும், வரும் நாட்களில் சில்லறை கடைகளில் ஒரு முட்டையின் விலை 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
