LATEST NEWS
தேர்வு அறையில் ChatGPT முறைகேடு..? பேராசிரியரின் சாதி வெறி மிரட்டல்தான் காரணமா..? ஐஐடி பாம்பே மாணவர் மரணத்தில் அதிர வைக்கும் பின்னணி..!!
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்வின் போது, சாஹில் செல்போன் மூலம் வினாத்தாளை ChatGPT-ல் பதிவேற்றி முறைகேடாகப் பதில்களைப் பெற முயன்றதாகக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பேராசிரியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கிய சில மணி நேரங்களிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இருப்பினும், சாஹிலின் மரணத்திற்குத் தேர்வு அறைச் சம்பவம் மட்டுமே காரணமல்ல என்றும், அவர் கடந்த மூன்று மாதங்களாகக் கடுமையான சாதி ரீதியிலான பாகுபாட்டை எதிர்கொண்டார் என்றும் அவரது தந்தை ரவீந்திர சக்ரதர் போலீசில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக, பேராசிரியர் சூர்யநாராயணன் துல்லா என்பவர் சாஹிலை சாதியைக் குறிப்பிட்டு அவமதித்ததாகவும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொய் வழக்கில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியதாகவும் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சூர்யநாராயணன் துல்லா மீது தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐஐடி நிர்வாகம் இந்தச் சாதி பாகுபாட்டுக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. மாணவர்களின் சாதி விவரங்கள் பேராசிரியர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றும், தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர் மீது எந்த அதிகாரப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கையும் அன்றைய தினம் எடுக்கப்படவில்லை என்றும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கின் விசாரணை தற்போது மும்பை போலீஸ் கிரைம் பிராஞ்ச் (Crime Branch) பிரிவுக்கு மாற்றப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஐஐடி பாம்பே வளாகத்தில் இந்த ஆண்டில் பதிவாகும் மூன்றாவது மாணவர் தற்கொலை இது என்பதால், மாணவர்களின் மனநலம் மற்றும் கல்வி அழுத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
