LATEST NEWS
“மணி கணக்கா காவல் நிலையத்துல காத்து கிடந்தேன்…” கதறும் பெண் பத்திரிகையாளர்… போராட்ட களத்தில் நடந்த அத்துமீறல்… வழக்கைப் பதிவு செய்யாமல் அதிகாரிக்கு உயர்பதவி வழங்கி அதிர்ச்சி..!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடாக லட்சக்கணக்கான வாக்காளார்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல்முறையை தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், சிஜேபி, காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேஹா போரா, உறுப்பினர் யோகேந்திரா யாதவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் மத்தியில், இந்த போராட்டத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த 3 பெண் பத்திரிகையாளர்கள் தாங்கள் டெல்லி காவல்துறை அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர். இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. எனினும், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, “பார்லிமெண்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெளியே பல மணிநேரம் அமர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வலியுறுத்தினேன், ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை” என்றார். இந்த சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கிளப் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான 3 போலீசாரில் ஒருவரான டெல்லி காவல் துறையின் உதவி ஆணையாளர் விவேக் பகத்திற்கு கூடுதல் துணை ஆணையாளராக (கூடுதல் டி.சி.பி.) பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், இது தற்காலிக அடிப்படையில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. மொத்தம் 12 அதிகாரிகளுக்கு இந்த தற்காலிக பதவி வழங்கப்படுகிறது என்றாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
