LATEST NEWS
“அவரை இனி நம்ப முடியாது..” அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரா டிரம்ப்..? ஈரானில் அவசரம் அவசரமாக விநியோகிக்கப்படும் மாத்திரைகள்..! பரபரப்பு பின்னணி..!!
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அமெரிக்காவில் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுசக்தி திட்டம் நிரந்தரமாக சிதைக்கப்படுவதையும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காது என்பதை உறுதிசெய்ய அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்க வேண்டுமா என டிரம்ப் கேள்வி எழுப்பினார். மேலும், நாட்டின் மற்ற பகுதிகளை தான் அழிக்க விரும்புவதில்லை என்றாலும், ஒருவேளை அதைச் செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் சூசகமாகத் தெரிவித்தார். போரை மீண்டும் தொடங்குவதா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபரின் இந்த அச்சுறுத்தலை அடுத்து, அணுசக்தி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஈரான் அரசாங்கம் அயோடின் மாத்திரைகளை வழங்கி வருகிறது. அணுசக்தி தாக்குதல்களின் போது கதிரியக்க அயோடினை தைராய்டு சுரப்பி உறிஞ்சுவதில் இருந்து பாதுகாக்க இந்த மாத்திரைகள் பயன்படுகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “டிரம்பை இனி நம்ப முடியாது, அவர் இந்த குற்றத்தை செய்யக்கூடும் என்பதால் நாங்கள் அயோடினை விநியோகித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ராணுவ பதற்றம் அதிகரிக்கும் போது அணுஉலைகளுக்கு அருகில் 2 முதல் 3 கி.மீ சுற்றளவில் வசிப்போருக்கு ஈரான் வழக்கமாக இந்த தடுப்பு மருந்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
