CRIME
“அடிப்பாவி.. பிளாக் செய்தால் இப்படியா செய்வது..?” காதலனைப் பழிவாங்க ChatGPT-ஐ கையில் எடுத்த காதலி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிர்ச்சி பின்னணி..!!
காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து, தனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், ‘சாட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியான ‘ஷீ டீம்ஸ்’ காவல்துறை நோட்டீஸைத் தயாரித்து அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சைஃபாபாத் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காதலனைப் பழிவாங்க நினைத்த அந்தப் பெண், காவல்துறையின் பெண்கள் பாதுகாப்புப் பிரிவான ‘ஷீ டீம்ஸ்’ சார்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பது போல் சாட்ஜிபிடி உதவியுடன் ஒரு போலி ஆவணத்தை உருவாக்கியுள்ளார். பின்னர் அந்தப் போலி நோட்டீஸை தனது முன்னாள் காதலனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி அவரை அச்சுறுத்த முயன்றுள்ளார்.
வாட்ஸ்அப்பில் வந்த நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அதன் உண்மைத்தன்மையை அறிய நேரடியாகச் சைஃபாபாத் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போதுதான், காவல்துறை தரப்பிலிருந்து அப்படி எந்தவொரு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என்பதும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த இளம்பெண் செய்த நூதன மோசடி இது என்பதும் அம்பலமானது. காவல்துறையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்திப் போலி ஆவணம் தயாரித்ததைத் தொடர்ந்து, சைஃபாபாத் காவல்துறையினர் அந்த இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
