உஷார்..! வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ உடனே இதை செய்யுங்கள்.. மத்திய அரசு விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார்..! வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ உடனே இதை செய்யுங்கள்.. மத்திய அரசு விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை..!!

Published

on

வாட்ஸ்அப் வெப் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கட்டாயம் ‘லாக் அவுட்’ செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு, பயனர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அவசர அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அலுவலகக் கணினிகள் அல்லது பொதுவான கணினிகளில் வாட்ஸ்அப் வெப் கணக்கை ‘லாக்-இன்’ செய்த நிலையிலேயே விட்டுச் சென்றால், சைபர் குற்றவாளிகள் அல்லது மூன்றாம் நபர்கள் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் படிக்கவும், அவர்களின் பெயரில் மற்றவர்களுக்கு மோசடிச் செய்திகளை அனுப்பவும் அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றி, ஊழியர்களிடம் அவசரமாகப் பணம் கேட்பது போன்ற நிதி மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வெறுமனே இணைய உலாவியின் பக்கத்தையோ அல்லது டேபையோ மூடுவது கணக்கிலிருந்து வெளியேறியதாகக் கருதப்படாது என்றும், அவ்வாறு செய்தாலும் கணக்கு தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அபாயங்களைத் தவிர்க்கப் பயனர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு முறை வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தி முடித்த பிறகும், அமைப்புகளுக்குச் சென்று முறையாக ‘Log out’ செய்ய வேண்டும். அரசு சார்ந்த ரகசியங்கள், முக்கிய அலுவலக ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களைக் கணினி வழியாக வாட்ஸ்அப் வெப்பில் பகிர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அத்துடன், பிரவுசிங் சென்டர்கள் ஹோட்டல் கணினிகள் அல்லது மற்றவர்களின் சாதனங்களில் வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை நம்பகமான மற்றொரு கணினியில் தற்காலிகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், இணைய உலாவியில் ‘Incognito’ அல்லது ‘Private Browsing’ முறையைப் பயன்படுத்தி, வேலை முடிந்தவுடன் உடனடியாக லாக் அவுட் செய்ய வேண்டும். இது தவிர, பயனர்கள் தங்களது மொபைல் வாட்ஸ்அப்பில் உள்ள ‘Linked Devices’ பகுதியை அவ்வப்போது தவறாமல் சரிபார்த்து, அதில் அறிமுகமில்லாத சாதனங்கள் ஏதேனும் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in