LATEST NEWS
“பாகுபலி போல செயல்படாதீங்க…” தேசிய நீதித்துறை அகாடமிக்கு போய் பயிற்சி எடுங்க.. மாவட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! நடந்தது என்ன..?!
பீகாரில் போலீஸ் சூப்பிரண்டுக்கு அபராதம் விதித்து தண்டனை வழங்கிய செஷன்ஸ் நீதிபதியின் செயல்பாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ‘பாகுபலி’ போல செயல்பட வேண்டாம் என்றும் நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக அனில் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு விசாரிக்கப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கில், பொய்யான சாட்சியம் அளித்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவை போலீசார் உடனடியாக நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, அப்போதைய ரோஹ்தாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவுஷன் குமாரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மதிக்காததாக கூறி போலீஸ் சூப்பிரண்டை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக குற்றவாளி என அறிவித்து, அவருக்கு அடையாளமாக ரூ.1 அபராதம் விதித்தார். மேலும், இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை போலீஸ் அதிகாரியின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், செஷன்ஸ் நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, செஷன்ஸ் நீதிபதி அனில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜாய் மால்யா பாக்சி பேசுகையில், சட்டம் குறித்த உங்களுடைய புரிதல் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்றும், போலீஸ் சூப்பிரண்டை நீதிமன்றத்துக்கு வரவழைத்து அதே நாளில் அவரை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கியுள்ளீர்கள் என்றும் கூறினார். நீதித்துறையில் ஒவ்வொருவரும் சட்டத்தின் நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் எனவும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 384-வது பிரிவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 345-வது பிரிவு ஆகியவற்றின் வரம்புகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், எப்.ஐ.ஆர். பதிவு செய்யாததை நீதிமன்றத்தின் முன்னிலையில் நிகழ்ந்த குற்றமாக கருத முடியாது என்றும், அதிகார வரம்பை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும், ‘பாகுபலி’ போல செயல்படுவதை நிறுத்தி இனியும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், தேசிய நீதித்துறை அகாடமிக்கு சென்று பயிற்சி பெறுங்கள் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீதிபதியின் விளக்கத்தையும், மன்னிப்பு கோரினால் அதையும் பாட்னா ஐகோர்ட் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், மனுவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
