LATEST NEWS
“இவர்களை தீயநோக்கத்துடன் நோக்கத்துடன் பார்த்தால் அவ்வளவுதான்….!” கால்கள் நடுங்கும் வகையில் போலீஸ் ஆக்ஷன்.. அமைச்சரின் எச்சரிக்கையால் பற்றி எரியும் அரசியல்..!!
மும்பையின் குர்லா பகுதியில் உள்ள பொது பூங்கா ஒன்றில் இளம் ஜோடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் அடங்கிய கும்பல், அந்த இளம் ஜோடியை தாக்கியதாகக் கூறப்படும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த சிறார் நீதி வாரியம், குற்றம் சாட்டப்பட்ட அந்த எட்டு சிறுவர்களையும் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக தலைவருமான நிதேஷ் ரானே, மதரஸா கல்வி முறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மதரஸாக்களில் மருத்துவர்களோ அல்லது பொறியாளர்களோ உருவாக்கப்படுவதில்லை என்றும், அங்கு இந்துக்களை வெறுக்கவும், மதம் மாற்றவும், கொல்லவும் மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், மகாராஷ்டிராவில் இந்துத்துவ ஆதரவு அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்து சமூகத்தின் மீது யாராவது தீய நோக்கத்துடன் செயல்பட்டால், வெள்ளிக்கிழமைகளில் அவர்களால் நிற்கவோ, அமரவோ முடியாத அளவுக்குக் கால்கள் நடுங்கும் நிலையை மகாராஷ்டிர காவல்துறை உருவாக்கும் என்றும் கடுமையாக எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிதேஷ் ரானே, இந்துக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்து சமூகத்தினர் தங்களுக்குள்ளேயே மட்டுமே வணிகம் செய்ய வேண்டும் என்றும், தங்களது வீடுகளை இந்துக்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “பாம்புகளுக்குப் பால் ஊட்டுவதற்குப் பதிலாக, நமது ‘இந்து ராஷ்டிர’த்தையும், பகவான் மகாதேவனின் இந்த நிலத்தையும் பலப்படுத்த நாம் உழைக்க வேண்டும்; நாம் அவர்களுக்குப் பால் ஊட்டுவதை நிறுத்திவிட்டால், அவர்கள் பசியால் இறந்துவிடுவார்கள்” என்று அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், அமைச்சர் நிதேஷ் ரானேவின் கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சில குற்றச் சம்பவங்களுக்கு பாஜக மதச் சாயம் பூச முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த், குற்றச் செயல்களுக்கு எந்த மதமும் கிடையாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தனிநபர் அல்லது ஒரு குழு செய்யும் குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட சமூகம் முழுவதையும் குறிவைப்பதும், குற்றவாளிகளை மத அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் ஆகிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
