LATEST NEWS
“என் காதலன் கூட நீ எப்படி சுற்றலாம்..?” நடுரோட்டில் 2 இளம்பெண்கள் போட்ட பயங்கர குடுமிப்பிடி சண்டை.. திகைத்து நின்ற காதலன்… வைரலாகும் வீடியோ..!!
திருப்பூர் மாவட்டம் அவினாசியில், ஒரே வாலிபரைக் காதலித்து வந்த இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவினாசி பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள், விடுமுறை தினத்தையொட்டி நேற்று முன்தினம் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியபடி கைகலப்பில் ஈடுபடத் தொடங்கினர்.
சிறிது நேரத்திலேயே இந்த வாக்குவாதம் முற்றி, இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரது தலைமுடியை மற்றொருவர் பிடித்து இழுத்தும், மாறி மாறி கன்னத்தில் அறைந்தும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இந்தச் சண்டையின் போது அருகில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபர் ஒருவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி சண்டையை நிறுத்துமாறு கூறிப் பார்த்தார். ஆனால், அந்த வாலிபரின் பேச்சைச் சிறிதும் பொருட்படுத்தாத இரண்டு பெண்களும் தொடர்ந்து சண்டையிட்டதால், அப்பகுதியில் கூட்டம் கூடியதுடன் அங்கிருந்த பலரும் இந்த மோதலைத் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி காவல்துறையினர், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இருவரும் அவினாசி பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதும், ஒரே வாலிபரை இருவரும் காதலித்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே அவர்களுக்கிடையே செல்போனில் தகராறு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று புதிய பேருந்து நிலையம் அருகே அந்த வாலிபருடன் ஒரு பெண் நின்று பேசிக் கொண்டிருந்ததை மற்றொரு பெண் நேரில் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ‘என் காதலருடன் நீ எப்படிச் சுற்றலாம்?’ என்று கேட்டுத் தகராறில் ஈடுபட்டதே இந்த நடுரோட்டு மோதலுக்குக் காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, இரண்டு பெண்களுக்கும் அறிவுரை கூறி சமாதானம் செய்த காவல்துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தற்போது, ஒரே காதலனுக்காக இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.
