LATEST NEWS
“ரயில்வேயின் மெகா குளறுபடி” இல்லாத சீட்டுக்கு கன்ஃபார்ம் டிக்கெட்… கழிவறையில் தேடச் சொல்லி நெட்டிசன்கள் கிண்டல்…!!
வாரணாசி நகரத்திலிருந்து நேபாள்கஞ்ச் ரோடு செல்லும் BCY-NPR எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 15132) ரயிலில் பயணித்த இஷான் பாஜ்பாய் என்ற பயணிக்கு, உறுதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்டில் A1 கோச்சில் 54-ஆம் எண் சைட் அப்பர் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரவு சுமார் 10:45 மணிக்கு ரயிலில் ஏறிப் பார்த்தபோது, அந்தக் கோச்சில் 52 படுக்கைகள் மட்டுமே இருந்ததால், இரவு முழுவதும் இருக்கை இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தக் குளறுபடி குறித்து ரயில்வே சேவா மற்றும் ரயில்வே அமைச்சகத்தைக் டேக் செய்து கேள்வி எழுப்பியதோடு, 139 என்ற ரயில்வே உதவி எண்ணிலும் அவர் புகார் பதிவு செய்தார். கோச்சில் உள்ள படுக்கை எண்களைக் காட்டும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, முன்பதிவு அமைப்புக்கும் உண்மையான கோச் அமைப்புக்கும் இடையிலான முரண்பாடு குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பதிவுக்குப் பதிலளித்த ரயில்வே சேவா, பயணியின் அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, புகார் டெல்லி ரயில்வே கோட்டத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், பயணியிடம் தொடர்பு எண்ணைக் கேட்டுப் பெற்ற ரயில்வே நிர்வாகம், பயணிக்கும் டிக்கெட் பரிசோதகரிடம் சரியான இருக்கை விவரங்கள் இருக்கும் என்பதால் அவரை அணுகுமாறும் அறிவுறுத்தியது.
