“பதவிக்காகக் கொள்கையை விற்கும் நன்றிகெட்ட கூட்டம்..!” மாணிக்கம் தாகூருக்கு மு.க. ஸ்டாலின் கொடுத்த காட்டமான பதிலடி.. திமுக – காங்கிரஸ் இடையே வெடித்த வார்த்தைப் போர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவிக்காகக் கொள்கையை விற்கும் நன்றிகெட்ட கூட்டம்..!” மாணிக்கம் தாகூருக்கு மு.க. ஸ்டாலின் கொடுத்த காட்டமான பதிலடி.. திமுக – காங்கிரஸ் இடையே வெடித்த வார்த்தைப் போர்..!!

Published

on

மத்திய அரசு வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டத் திட்டமிட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா, போதிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதே முயற்சியில் மத்திய அரசு இறங்கலாம் எனக் கூறப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்பதால் திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “எட்டப்பர்கள் ரெடியா?” எனக் கேள்வி எழுப்பி திமுகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்குக் காட்டமான பதிலடி கொடுத்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியதும், அகில இந்தியத் தலைவர்களைச் சென்னையில் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியதும் திமுகதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18 சதவீதத்திலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் குறையக் கூடாது என்றும், 1971 மக்கள்தொகை அடிப்படையிலான விகிதாசாரம் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் திமுக உறுதியாக இருப்பதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், தங்களது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமோ அல்லது சமரசமோ என்ற பேச்சுக்கே இடமில்லை என மு.க. ஸ்டாலின் அழுத்தமாகக் கூறியுள்ளார். ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், ‘முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும்’ திமுகவின் உறுதியை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று சாடியுள்ள அவர், பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனையும், அரசியல் உரிமைகளையும் திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும், கொண்ட கொள்கையிலிருந்து தடம் மாறாது என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in