LATEST NEWS
“குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல…” கோயிலையே மத்திய அரசுக்கு தாரை வார்த்துவிட்டு இன்னும் ஏன் அமைதி..? முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் காட்டம்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை முன்வைக்கத் தவறியதால் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மலை முழுவதையும் மத்திய ரிசர்வ் காவல் படையிடம் (CRPF) ஒப்படைத்தது, கோயில் அறங்காவலர்கள் குழுவைக் கலைத்து முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்தது மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டது ஆகியவை அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்காமல் இரட்டை நிலைப்பாடுகளை எடுத்ததுடன், அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் “குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல” எல்லாவற்றையும் தவெக அரசு சிதைத்திருப்பதாகவும், அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கமும் திமுகவும் போராடிப் பாதுகாத்த மாநில உரிமைகளையும், மக்களாட்சியின் கீழ் கொண்டுவந்த கோயில் நிர்வாகத்தையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துவிட்டதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டு , ‘ஸ்டாண்ட்-அப் காமெடியன்’ போல வசனங்களை நடித்துக் காட்டிக்கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், அனுபவம் வாய்ந்தவர்களையும் அறிவுடையவர்களையும் அவர் அருகில் அண்டவிடுவதில்லை என்பதே பல பிரச்சினைகளுக்குக் காரணம் எனக் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்பட்ட பிறகும் முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் எனச் சாடியுள்ள அவர், எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் மக்களே பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
