CRIME
வாசலிலேயே காத்திருந்த எமன்.. கடையை மூடிவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்.. கார்த்திகை தீப விளக்கிலிருந்து சேலையில் பற்றிய தீ.. கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் கருகி பலி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குக்கட்பள்ளி வீட்டு வசதி வாரிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கார்த்திகை தீப விளக்கிலிருந்து சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்த 18 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடகுட்டா வெஸ்டர்ன் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சாய் வெங்கட சிந்து என்ற இளம்பெண், அப்பகுதியில் உள்ள 5-வது சாலையில் ‘எஸ்.எஸ். பொட்டிக்’ என்ற ஆடையகத்தை நடத்தி வந்தார். இளம் வயதிலேயே சுயதொழில் செய்து வந்த சிந்துவின் எதிர்பாராத மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மாதத்தின் 12-ஆம் தேதி இரவு, சிந்து தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வீட்டின் நுழைவாயில் அருகே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு வீட்டின் வாசல் கேட் அருகே ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கின் தீ, சிந்து அணிந்திருந்த சேலையில் எதிர்பாராத விதமாகப் பற்றிக்கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியதால், சிந்து வலியால் அலறித் துடித்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிந்துவை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்து வெள்ளிக்கிழமையன்று பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதிலேயே துடிப்புடன் செயல்பட்டு வந்த சிந்துவின் அகால மரணம், அவரது குடும்பத்தினரையும் அடகுட்டா வெஸ்டர்ன் ஹில்ஸ் பகுதி மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
