CRIME
“சரக்கு வாங்க வந்த இடத்தில் சண்டையா..?” போன் போட்டு குடும்பத்தையே வரவழைத்த குடிகாரர்… பெண்களின் அசிங்கமான பேச்சால் அலறிய ஊழியர்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள ஒரு நவீன மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்ற நபருக்கும் அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் பெரும் வன்முறையாக மாறிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக விற்பனையாளருடன் தகராறில் ஈடுபட்ட ராஜேஷ், இது குறித்து உடனடியாகத் தனது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பெண்கள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு அந்த மதுபானக் கடைக்கு வந்து, அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த ராஜேஷின் குடும்பத்தினர் கடையில் இருந்த விலையுயர்ந்த மதுபான பாட்டில்களைச் சரமாரியாக அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். மேலும், அங்கிருந்த பெண்கள் கடுமையான மற்றும் அசிங்கமான வார்த்தைகளால் கடையின் ஊழியர்களைத் திட்டித் தீர்த்தனர். இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக முதன்மைக் குற்றவாளியான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
